search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ கேம்"

    ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ விளையாட விடாததால் தங்கள் மகன் வீட்டில் இருந்த நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
    பெரம்பூர்

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயதான மாணவர் ஒருவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருடைய தாய், கல்லூரியில் பேராசிரியையாகவும், தந்தை சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராகவும் உள்ளனர்.

    மாணவர், செல்போனில் எந்நேரமும் ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ விளையாடி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். மேலும் அவர், ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ விளையாட விடாமல் தடுத்ததாகவும் தெரிகிறது.

    இதனால் விரக்தி அடைந்த மாணவர், கடந்த 17-ந்தேதி இரவு திடீரென வீட்டில் இருந்து வெளியேறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், எங்கு தேடியும் மகனை காணாததால் வீட்டில் உள்ள பீரோவை சோதனை செய்தனர். அதில் இருந்த 213 பவுன் நகை, ரூ.33 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ விளையாட விடாததால் தங்கள் மகன் வீட்டில் இருந்த நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் இருதயராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிராங்வின் டேனி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மாயமான மாணவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    மாணவரின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர், தாம்பரத்தில் இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் தாம்பரம் சென்று மாணவரை மடக்கிபிடித்து மீட்டனர். அவரிடம் இருந்த நகை, பணமும் மீட்கப்பட்டது. பின்னர் அவரை வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில், ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ விளையாட பெற்றோர் தடுத்ததால் வெளிநாடு சென்றுவிடலாம் என கருதி நகை, பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர், தாம்பரத்தில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

    நேற்று காலை நேபாளத்துக்கு செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்ததுடன், இதற்காக கொரோனா பரிசோதனையும் செய்துவிட்டு அதன் முடிவுக்காக காத்திருந்தார். விமானத்தில் அதிக அளவு நகைகளை கொண்டு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் நகைகளை ரூ.70 லட்சத்துக்கு அடகு வைக்கவும் முயன்றுள்ளார்.

    அத்துடன் புதிய செல்போன் ஒன்றையும் வாங்கி நண்பர்களுடன் ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ விளையாடியதும் விசாரணையில் தெரியவந்தது. சரியான நேரத்தில் போலீசார் சென்றதால் மாணவர் நேபாளத்துக்கு செல்வதற்கு முன்பு மீ்ட்கப்பட்டார்.

    பின்னர் மாணவரை கண்டித்து அறிவுரைகள் வழங்கிய போலீசார், நகை, பணத்துடன் மாணவரையும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

    ×